Subscribe:

108 Divya Desam


சீர்காழி பகுதி 108  சோழநாட்டு திவ்ய தேசங்கள்

இந்த ஸ்தலங்களுக்கு சென்று வர வாகன வசதிகள் செய்து தரப்படும்.


அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில்


மூலவர்:திரிவிக்கிரம நாராயணர்
உற்சவர்:தாடாளன்
அம்மன்/தாயார்: லோகநாயகி
தல விருட்சம்: பலா
தீர்த்தம்:சங்கு, சக்கர தீர்த்தம்
ஆகமம்/பூஜை :வைகானஸம்
பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:பாடலிகவனம், காழிச்சீராம விண்ணகரம்
ஊர்:சீர்காழி
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு 


தல வரலாறு:
    படைக்கும் கடவுளான பிரம்மா பல யுகங்கள் வாழும்படி சாகாவரம் பெற்றிருந்தார். இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகவே, தனது பணியையும் அவர் சரியாக செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு.இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத்தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. சுவாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார். அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், "என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை பெறுவீர்கள். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்' என்று கூறி இத்தலத்தில் திரிவிக்கிரமனாக எழுந்தருளினார். மகாவிஷ்ணு சூட்சுமமாக தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப்பெற்றார்.

இருப்பிடம் :  சீர்காழி பஸ் ஸ்டாண்டில் இருந்து சிதம்பரம் செல்லும் பஸ்களில் சுமார் 2 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.



அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில்






மூலவர்: கோபாலகிருஷ்ணன் (ராஜகோபாலன்) பாமா, ருக்மணியுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
  உற்சவர்: -
  அம்மன்/தாயார்: செங்கமல நாச்சியார், மடலவரல் மங்கை
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: தடமலர்ப்பொய்கை தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்: காவளம்பாடி
  ஊர்: காவளம்பாடி
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு

தல வரலாறு:
             காவளம் என்றால் பூஞ்சோலை. துவாரகை போல பூஞ்சோலைகள் மிக்க ஒரு இடம் தேடி, அங்கே பாமாவுடன் தங்க விரும்பினார் கிருஷ்ணர். அப்படி அமர்ந்த இடத்தில் ஒன்று தான் காவளம்பாடி. இன்றைக்கும் கூட இந்த இடம் மிகவும் பசுமையாகத்தான் உள்ளது. இத்தலத்தை வட துவாரகைக்கு இணையாக தல புராணம் கூறுகிறது. பாமாவுக்கு பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி கிருஷ்ணனால் பூமியில் நடப்பட்ட இடம் தான் காவளம்பாடி. சிவனுக்கும், சேனைத்தலைவர் விஷ்வக்சேனருக்கும் இந்த கிருஷ்ணன் காட்சி தந்துள்ளார். கோயில் சிறியது தான் என்றாலும், மிக அருமையாக உள்ளது.

இருப்பிடம் : சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் காவளம்பாடி (திருநாங்கூர்) அமைந்துள்ளது.


அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில்


மூலவர்:குடமாடு கூத்தன்
உற்சவர்:சதுர்புஜ கோபாலர்
அம்மன்/தாயார்: அமிர்தவல்லி
தல விருட்சம்: பலாச மரம்
தீர்த்தம்:அமிர்த தீர்த்தம்
ஆகமம்/பூஜை :பாஞ்சராத்ரம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:அரியமேய விண்ணகரம்
ஊர்:திருநாங்கூர்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு 

தல வரலாறு:
            உதங்கர் எனும் முனிவர் ஒருவர் தன் இளவயதில் வைதர் என்பவரை குருவாக ஏற்றுக்கொண்டு அவரிடம் வேதம் பயின்றார். அவர் வேதங்களை நன்கு கற்று தேர்ந்ததும், குருவிற்கு தட்சணை செலுத்த விரும்பினார். குருபத்தினி உதங்கரிடம், அந்நாட்டை ஆளும் மகாராஜாவின் மனைவி அணிந்திருக்கும் குண்டலம் வேண்டும் என்றாள். உதங்கரும் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் அவளது குண்டலங்களைக் கேட்டார். அவரைப் பற்றி அறிந்திருந்த மகாராணியாரும் குண்டலங்களைக் கொடுத்து விட்டார். அதனை எடுத்துக்கொண்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வழியில் பசியும், தாகமும் அவரை வாட்டியது. அப்போது அங்கு இடையன் ஒருவன் தலையில் பானை ஒன்றை சுமந்தபடி ஆடிக்கொண்டே பசுக்களை ஓட்டிக்கொண்டு வந்தான். அவனருகே சென்ற உதங்கர் தன் தாகம் நீங்க பானையில் இருப்பதை தரும்படி கேட்டார். இடையன் பானையில் பசுவின் சாணமும், கோமியமும் இருப்பதாக சொன்னான். மேலும், இதைத்தான் அவனது குரு வைதரும் உண்டதாக கூறினான். குரு உண்ட பொருள் என்று சொன்ன உடனே உதங்கர் அதை வாங்கிக்கொண்டார். கமண்டலத்தை ஒரு மரத்தின் அடியில் வைத்துவிட்டு, அவர் அதனை பருகினார். அப்போது அவ்வழியே வந்த தட்சன் என்பவன் கமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஓடினான். உதங்கரும் அவனைத் துரத்திச்செல்ல அவன் ஒரு பொந்திற்குள் ஒளிந்து கொண்டான். கவலை கொண்ட உதங்கர் இடையனிடம், அவனிடம் இருந்து தன் கமண்டலங்களை மீட்க ஆலோனை கேட்டார். அப்போது அவ்வழியே மற்றொருவர் குதிரையில் வந்தார். குதிரைக்காரரைக் காட்டிய இடையன், அவருடன் சென்றால் கமண்டலங்களை மீட்க உதவி செய்வார் என்றார். இடையன் அவருடன் சென்றார். கமண்டலத்தை எடுத்தவன் மறைந்திருந்த பொந்திற்கு முன் சென்ற குதிரைக்காரர், தன் குதிரையின் வாயில் இருந்து நெருப்பைக் கக்கச்செய்தார். நெருப்பின் உஷ்ணம் தாங்காத தட்சன் வெளியில் வந்து கமண்டலத்தை திருப்பி கொடுத்தான். இடையனுக்கும், குதிரை மீது வந்தவருக்கும் நன்றி சொல்லிவிட்டு குருகுலம் திரும்பினார் உதங்கர். வைதரிடம் நடந்த விஷயங்களை சொன்னார். நடந்ததை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த வைதர், "உனத குரு பக்தியை சோதிக்கவே இடையனாக மகாவிஷ்ணுவும், குதிரை வடிவில் இருந்த அக்னியின் மேல் இந்திரனும் வந்ததாக' சொன்னார். மேலும் இடையன் குடத்தில் வைத்திருந்தது அமுதம் என்றும், அதனைப் பருகியாதாலே அக்னியின் உஷ்ணத்தை அவனால் தாங்க முடிந்ததென்றும் விளக்கம் தந்தார். தனக்காக இடையனாக வந்த மகாவிஷ்ணுவின் சுயரூபத்தை காண விரும்பி சுவாமியை வேண்டினார் உதங்கர். அவருக்கு மகாவிஷ்ணு இத்தலத்தில் வெண்ணெய் நிரம்பிய குடத்துடனே காட்சி தந்தார்.

இருப்பிடம் :சீர்காழியில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் இவ்வூர் இருக்கிறது. இங்கிருந்து குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. சீர்காழி - அண்ணன்கோயில் சென்று அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.



அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில்

மூலவர்:புருஷோத்தமர்
உற்சவர்:-
அம்மன்/தாயார்: புருஷோத்தம நாயகி
தல விருட்சம்: பலா, வாழை மரம்.
தீர்த்தம்:திருப்பாற்கடல் தீர்த்தம்
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருவன் புருஷோத்தமம்
ஊர்:திருவண்புருசோத்தமம்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு

 தல வரலாறு
         சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகாவிஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள்.

இருப்பிடம் : சீர்காழி- நாகப்பட்டினம் ரோட்டில் அண்ணன் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் இறங்கி கிழக்கே 2 கி.மீ. செல்ல வேண்டும். சீர்காழியிலிருந்து 9 கி.மீ., தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது.


அருள்மிகு பேரருளாளன் திருக்கோயில்
மூலவர்:பேரருளாளன்
உற்சவர்:செம்பொன்னரங்கன், ஹேரம்பர்
அம்மன்/தாயார்: அல்லிமாமலர் நாச்சியார்
தல விருட்சம்: -
தீர்த்தம்:நித்ய புஷ்கரணி, கனகதீர்த்தம்
ஆகமம்/பூஜை :பாஞ்சராத்ர ஆகமம்
பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:செம்பொன்செய் கோயில்
ஊர்:செம்பொன்செய்கோயில்
மாவட்டம்: நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு

தல வரலாறு
          ராவணனுடன் யுத்தம் முடித்த பின் ராமபிரான் அயோத்தி திரும்பும் வழியில் இங்குள்ள த்ருடநேத்ர முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார். ராவணனை கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, முனிவரின் ஆலோசனைப்படி தங்கத்தினால் மிகப்பிரம்மாண்டமான பசுவின் சிலை செய்தார். அந்த பசுவின் உள்ளே அமர்ந்து நான்கு நாள் தவம் செய்தார். ஐந்தாவது நாள் அந்த சிலையை ஒரு அந்தணருக்கு தானமாகக் கொடுத்தார். இப்படி செய்ததால் ராமரின் தோஷம் விலகியது. அந்த அந்தணர் பசுவின் சிலையை விற்று இக்கோயிலை கட்டியதால் இத்தலம் "செம்பொன்செய் கோயில்' என வழங்கப்படுகிறது.

இருப்பிடம் :  சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள அண்ணன்கோவில் ஸ்டாப்பில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தூரம் ஆட்டோவில் சென்றால் கோயிலை அடையலாம்.


அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்

மூலவர்:பத்ரிநாராயணர்
உற்சவர்:அளத்தற்கரியான்
அம்மன்/தாயார்: புண்டரீக வல்லி
தல விருட்சம்: பலா
தீர்த்தம்:இந்திர புஷ்கரிணி
ஆகமம்/பூஜை :பாஞ்சராத்ரம்
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:பலாசவனம்
ஊர்:திருமணிமாடக்கோயில்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு
தல வரலாறு 
         பார்வதியின் தந்தையாகிய தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு செல்ல வேண்டாம் என பார்வதியை தடுத்தார் சிவன். ஆனாலும் நியாயம் கேட்பதற்காக யாகத்திற்கு சென்றுவிட்டாள் பார்வதி. கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். அப்போது சிவனது திருச்சடை முடி தரையில் பட்ட இடங்களில் எல்லாம் சிவ வடிவங்கள் தோன்றின. இவ்வாறு 11 சிவ வடிவங்கள் தோன்றி அனைவரும் தாண்டவம் ஆடினர். இதனால் உலக உயிர்கள் கலக்கமடைந்தன. அச்சம் கொண்ட மகரிஷிகள், தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர் பத்ரி நாராயணராக 11 வடிவங்கள் எடுத்து சிவன் முன்பு வந்தார். நாராயணரைக் கண்ட சிவன் தாண்டவத்தை நிறுத்தினார். பின் அவர் 11 சிவ வடிவங்களையும் ஒன்றாக ஐக்கியப்படுத்தினார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்தது என தலவரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு 11 பெருமாள் கோயில்களும், 11 சிவாலயங்களும் இருக்கிறது. 11 பெருமாள்களுக்கும் பத்ரி நாராயணரே பிரதானமானவராக இருக்கிறார். இவர் ஒருவரை தரிசனம் செய்தாலே அனைவரையும் தரிசனம் செய்த பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.

இருப்பிடம் :  சீர்காழியில் இருந்து (8 கி.மீ.,) இவ்வூருக்கு குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் செல்கிறது. சீர்காழி - காரைக்கால் செல்லும் பஸ்களில் அண்ணன்கோயில் சென்று அங்கிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.



அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில்




மூலவர்: வைகுண்ட நாதர், தாமரைக்கண்ணன்
  உற்சவர்: -
  அம்மன்/தாயார்: வைகுந்த வல்லி
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: லட்சுமி புஷ்கரணி, உத்தரங்க புஷ்கரணி, விரஜா
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்: வைகுண்ட விண்ணகரம்
  ஊர்: வைகுண்ட விண்ணகரம்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு

தல வரலாறு  
ராமபிரான் அவதரித்த இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் ஸ்வேதகேது. நீதி நெறி தவறாதவன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவன். தெய்வ பக்தி கொண்டவன். இவனது மனைவிக்கும் இவனுக்கும் மகா விஷ்ணுவை அவர் வசிக்கும் இடமான வைகுண்டத்திற்கு சென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. ஸ்வேதகேது அரசனானதால் தனது ஆட்சி கடமைகளை முடித்து விட்டு மனைவி தமயந்தியுடன் தவம் செய்ய புறப்பட்டான். சுற்றிலும் தீ வளர்த்து, சூரியனைப் பார்த்தபடி தீயின் நடுவில் நின்று இருவரும் மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார்கள். நீண்ட நாள் இப்படி தவம் இருந்து தங்களது பூதவுடலை துறந்து வைகுண்டம் சென்றார்கள். ஆனால் அங்கு யாரை தரிசிக்க தவம் இருந்தார்களோ அந்த வைகுண்ட வாசனை காணவில்லை. இவர்கள் வருத்தத்துடன் இருந்தபோது அங்கு வந்த நாரதரின் பாதங்களில் விழுந்து இருவரும் வணங்கினார்கள். வைகுண்டத்தில் விஷ்ணுவை தரிசிக்க இயலாமல் போனதற்கான காரணத்தை கேட்டனர். அதற்கு நாரதர்,""நீங்கள் இருவரும் கடுமையாக தவம் இருந்தாலும், பூமியில் தான தர்மங்கள் செய்யவில்லை. அத்துடன் இறைவனுக்காக சாதாரண ஹோமம் கூட செய்யவில்லை. எனவே தான் வைகுண்டத்தில் விஷ்ணுவின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு பிராயச்சித்தமாக பூமியில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரரை வணங்கி, முறையிட்டால் அவர் அனுக்கிரகத்துடன் வைகுண்ட பெருமாளின் தரிசனம் கிடைக்கும்,' என்றார். ஸ்வேதகேதுவும் தமயந்தியும் ஐராவதேஸ்வரரை வழிபட்டு பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டினர். இவர்களது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் ""நானும் பெருமாளின் தரிசனத்திற்கு காத்திருக்கிறேன். மூவரும் மகாவிஷ்ணுவின் தரிசனத்திற்கு தவம் இருப்போம்,' என்றார். இவர்களுடன் உதங்க முனிவரும் சேர்ந்து தவம் இருந்தார். நீண்ட காலத்திற்கு பின் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக நால்வருக்கும் காட்சி தந்தார். அப்போது ஐராவதேஸ்வரர், பெருமாளிடம், "" ""பெருமாளே! நீங்கள் காட்சி கொடுத்த இந்த இடம் இன்று முதல் வைகுண்ட விண்ணகரம் எனவும், உங்கள் திருநாமம் வைகுண்டநாதர் எனவும் அழைக்கப்பட வேண்டும்,' என வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே வைகுண்டவாசனாக பூலோகத்தில் இருக்கிறார். பெருமாள் வைகுண்ட நாதன் எனவும், தாயார் வைகுந்தவல்லி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இருப்பிடம் :  சீர்காழியின் தென் திசையில் 7வது கி.மீ தூரத்தில் உள்ளது திருநாங்கூர். சீர்காழி-நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் அண்ணன் கோவில் சென்று, அங்கிருந்து ஒரு கி.மீ.,தொலைவிலுள்ள திருநாங்கூர் வைகுந்த விண்ணகரம் கோயிலுக்கு நடந்தே செல்லலாம். 


அருள்மிகு அழகியசிங்கர் திருக்கோயில்



மூலவர்:அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்
உற்சவர்:திருவாலி நகராளன்
அம்மன்/தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி)
தல விருட்சம்: வில்வம்
தீர்த்தம்:இலாட்சணி புஷ்கரிணி
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:ஆலிங்கனபுரம்
ஊர்:திருவாலி
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்: தமிழ்நாடு

தல வரலாறு 
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. குலசேகர ஆழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பகுதியில் (ஆலிநாடு) திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக திகழ்ந்தார். எனவே அவருக்கு "ஆலிநாடன்' என்ற பெயர் உண்டாயிற்று.

இருப்பிடம் :  திருவாலி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் திருநகரி உள்ளது

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில்


மூலவர்: வேதராஜன்
  உற்சவர்: கல்யாண ரங்கநாதன்
  அம்மன்/தாயார்: அமிர்த வல்லி
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: இலாக்ஷ புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்: -
  ஊர்: திருநகரி
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தர பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த லட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் தன்னை ஒளித்து கொண்டாள். பெருமாள் லட்சுமியை தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலி-திருநகரி ஆனது. திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவஸு மன்னனாக பிறந்தான். இவன் இத்தலத்தின் மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும்போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்றுவிட்டது. எனவே, இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி தனக்கு மோட்சம் வேண்டி பெருமாளிடம் தவம் செய்தான். கிடைக்கவில்லை. அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என கூறினார். கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாக பிறந்தான். இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய நினைத்தான். அவள்,""ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் நான் உங்களுக்கு மனைவியாவேன்,' என்று நிபந்தனை விதித்தாள். இந்த அன்னதானத்திற்கு பொருள் தீர்ந்த பிறகு நீலன் வழிப்பறியில் ஈடுபட்டான். அந்த நேரத்தில் பெருமாள் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும் திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது

இருப்பிடம் : சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 9 கி.மீ., தூரத்தில் உள்ள திருவாலியிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் திருநகரி உள்ளது. 

அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில்

மூலவர்: தெய்வநாயகப்பெருமாள்
  உற்சவர்: மாதவப்பெருமாள்
  அம்மன்/தாயார்: கடல் மகள் நாச்சியார்
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: சோபன, தேவசபா புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்: கீழச்சாலை
  ஊர்: திருத்தேவனார்த்தொகை
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு

 தல வரலாறு
துர்வாச முனிவர் வைகுண்டத்தில் தனக்கு கிடைத்த பெருமாளின் மாலையை இந்திரனிடம் கொடுத்தார். அவன் அதை ஐராவத யானையின் மீது தூக்கி எறிந்தான். இதனால் ஆத்திரமடைந்த துர்வாசர், பெருமாள் மார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமி. அங்கிருந்து கிடைத்த மாலையை அவமதித்து விட்டாய். எனவே லட்சுமியாகிய செல்வம் உன்னை விட்டு வைகுண்டம் செல்லட்டும். உனக்கு தரித்திரம் பிடிக்கட்டும், என்று சாபம் கொடுத்தார். அதிர்ந்து போனான் இந்திரன். ஐராவதம் மறைந்தது. மாலையை பணிவாக ஏற்றதால் அது வைகுண்டம் சென்றது. துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான் இந்திரன். துர்வாசரும், "இந்திரனே! இறைவனது பிரசாதமும், இறைவனும் ஒன்று தான். இறைவனது பிரசாதப்பொருள்களை அவமதிக்க கூடாது. இதை உனது குரு உனக்கு சொல்லி தரவில்லையா? நீ அவரிடமே சாப விமோசனம் கேள்', என கூறி சென்று விட்டார். கங்கை கரையில் தவம் செய்து கொண்டிருந்த குரு பிரகஸ்பதியிடம் சென்று சாப விமோசனம் கேட்டான் இந்திரன். அவரோ, நாம் பிறக்கும் போதே நமது முன் ஜென்ம வினைக்கேற்ப பலனை பிரம்மன் தலையில் எழுதி விட்டார். அதை மாற்ற யாராலும் முடியாது. வேண்டுமானால், நீ பிரம்மனிடம் சென்று கேட்டுப்பார் என கூறி அனுப்பி விட்டார். பிரம்மனோ, இது பெருமாள் காரியம், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது. நீ மகா விஷ்ணுவின் பாதங்களில் சரணடைந்து விடு, என்றார். பெருமாள், இந்திரனே! என் பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்த வீட்டிலும் நானும் என் மனைவியும் தங்க மாட்டோம். நீ, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடல் கடையும் நேரம் வரை காத்திரு. அப்போது உன் சாபம் தீர்வதுடன், எங்களது திருமணத்தையும் காணும் பாக்கியம் பெறுவாய் என கூறி ஆசி வழங்கினார். பாற்கடலை கடையும் காலம் வந்தது. மகாலட்சுமி அதில் தோன்றினாள். மறைந்து போன ஐராவதம் யானையும் வந்தது. இந்திரன் மகாலட்சுமியை பலவாறாக போற்றினான். அவள் ஒரு மாலையை அவனுக்கு வழங்கினாள். அதை தன் கண்ணில் ஒற்றிக்கொண்ட இந்திரன் மீண்டும் தேவேந்திரன் ஆனான்.

இருப்பிடம் :நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் திருநாங்கூர் உள்ளது. சீர்காழியிலிருந்து பஸ் வசதி உள்ளது.

அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில்


மூலவர்: செங்கண்மால், பள்ளிகொண்ட ரங்கநாதர்,
  உற்சவர்: -
  அம்மன்/தாயார்: செங்கமல வல்லி
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: சூரிய புஷ்கரணி
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்: -
  ஊர்: திருத்தெற்றியம்பலம்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு

 தல வரலாறு
இரண்யாட்சன் என்ற அசுரன் பூமியை தூக்கி கொண்டு பாதாள உலகத்தில் மறைத்து வைத்து விட்டான். தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவரும் பூமியை காப்பாற்றுவதற்கு வராக அவதாரம் எடுக்க சம்மதித்தார். இதை கேட்டவுடன் மகாலட்சுமி,""பகவானே! நான் ஒரு நொடி கூட உங்களை விட்டு பிரியாமல் தங்களது மார்பில் குடியிருப்பவள். நீங்களோ என்னை விட்டு வராக அவதாரம் எடுக்கபோவதாக கூறுகிறீர்கள். நான் எப்படி தனியாக இருப்பது,''என வருத்தப்பட்டாள். இதே போல் ஆதிசேஷனும், ""பரந்தாமா! நீங்கள் பூமியை காக்க பாதாள உலகம் சென்று விட்டால் என் கதி என்னாவது?'' என வருத்தப்பட்டார். இதைக்கேட்ட பெருமாள், ""பயப்படாதீர்கள். எல்லாம் நன்மைக்கு தான். நீங்கள் இருவரும் "பலாசவனம்' சென்று என்னை தியானம் செய்ய புறப்படுங்கள். அங்கே சிவபெருமானும் வருவார். நான் இரண்யாட்சனை வதம் செய்து விட்டு உங்களுக்கு அனுக்கிரகம் செய்ய அங்கு வந்து விடுகிறேன்,'' என்றார். அத்துடன் கலியுகத்தில் இத்தலம் "திருத்தெற்றியம்பலம்' என அழைக்கப்படும். என் தீவிர பக்தரான ஸ்ரீபாஷ்யகாரர், தீட்சை பெற்ற 108 வைஷ்ணவர்களை அழைத்து என்னை ஆராதனை செய்ய இருக்கிறார். நான் அங்கிருந்து உலகத்தை காத்து ரட்சிக்க போகிறேன். கலியுகம் முழுவதும் அங்கேயே நித்தியவாசம் செய்ய போகிறேன்,'' என்றருளினார். வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாள உலகிற்கு சென்று இரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டு அது இருக்க வேண்டிய இடத்தில் மெல்ல சுழல விட்டார். இதையறிந்த மகாலட்சுமியும், ஆதிசேஷனும் பூமிக்கு வந்து மகாவிஷ்ணு குறித்து தவம் செய்ய ஆரம்பித்தனர். மகாவிஷ்ணு தான் கொடுத்த வாக்குப்படி பலாசவனம் (திருத்தெற்றியம்பலம்) சென்று அங்கிருந்த சிவன், மகாலட்சுமி, ஆதிசேஷனுக்கு அருள்புரிந்தார். பின் அங்கேயே போர்புரிந்த களைப்பு தீர, சிவந்திருந்த அழகான கண்களுடன் பள்ளி கொண்டார். இதனால் இத்தல பெருமாள் "செங்கண்மால் ரங்கநாதர்' என்றழைக்கப்படுகிறார்.

இருப்பிடம் :  சீர்காழியிலிருந்து (6 கி.மீ) நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள திருநாங்கூரில் கோயில் உள்ளது. 

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்


மூலவர்: வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்)
  உற்சவர்: -
  அம்மன்/தாயார்: திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி)
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: சந்திர புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்: -
  ஊர்: திருமணிக்கூடம்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
தல வரலாறு
தக்கனுக்கு 27 மகள்கள். இவர்கள் அனைவரும் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்கள். 27 பெண்களிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்துவதாக தக்கனிடம் சந்திரன் வாக்கு கொடுத்தான். ஆனால் ரோகிணியிடம் மட்டுமே மிகுந்த காதலுடன் இருந்தான். இதனால் மற்ற மனைவிகள் தங்களது தந்தையிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட தக்கன்,""உன் அழகும், ஒளியும் தினம் தினம் குறையட்டும்,'என சாபமிட்டான். சாபம் பலித்ததால், முழு சந்திரன் தேய தொடங்கினான். சாபம் தீர ஸ்ரீரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு என ஒவ்வொரு கோயிலாக சென்று கடைசியில் திருமணிக்கூடத்திற்கு வந்தான். அங்கே அவனுக்கு பெருமாள் வரம் தந்து வரதராஜனாக காட்சி தந்தார். அவனது நோய் விலகியது. சாபவிமோசனம் கிடைத்தது.

இருப்பிடம் :  சீர்காழியிலிருந்து(6 கி.மீ) நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் இத்தலம் செல்லலாம்.

அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில்

மூலவர்: அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன்
  உற்சவர்: சீனிவாசன்
  அம்மன்/தாயார்: அலர்மேல் மங்கை (உற்சவர்: பூவார் திருமகள், பத்மாவதி)
  தல விருட்சம்: வில்வம், பரசு
  தீர்த்தம்: வெள்ளக்குள தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்: திருவெள்ளக்குளம்
  ஊர்: திருவெள்ளக்குளம்
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
தல வரலாறு
துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர், திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் பலன் கிடைக்கும் என்றார். முனிவர் கூறியபடி சுவேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய "நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை' சீனிவாசப்பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறிவந்தான். மனமிறங்கிய பெருமாள்,""சுவேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் 8000 தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையது'' என்று கூறினார். வைணவத்தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.

இருப்பிடம் : சீர்காழிக்கு தெற்கே 6 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது. சீர்காழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்சில் செல்லலாம்.

அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்


மூலவர்: தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி
  உற்சவர்: பார்த்தசாரதி
  அம்மன்/தாயார்: தாமரை நாயகி
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: கட்க புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்: -
  ஊர்: பார்த்தன் பள்ளி
  மாவட்டம்: நாகப்பட்டினம்
  மாநிலம்: தமிழ்நாடு
தல வரலாறு
கவுரவர்களிடம் நாடிழந்து, வனவாசம் சென்ற போது, அர்ஜுனன் தாகத்திற்கு தண்ணீர் தேடி அலைந்தான். ஓரிடத்தில் அகத்தியர் கமண்டலத்தை அருகில் வைத்து தியானத்தில் இருப்பதை பார்த்தான். தியானம் முடிந்து கண்திறக்கும் வரை தன்னால் தாகத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் அகத்தியரின் தியானத்தை கலைத்து தனக்கு தண்ணீர் தருமாறு கேட்டான். அவரது அனுமதியுடன் கமண்டலத்தை திறந்தான். அதில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை. கேள்விக்குறியுடன் அகத்தியரின் முகத்தை பார்த்த அர்ஜூனனிடம், ""அர்ஜுனா! நீ எப்போதும் எது வேண்டினாலும் கொடுக்கும் கடவுளான கிருஷ்ணனிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும்,'என்றார். தன் தவறை உணர்ந்த அர்ஜுனன்,""கிருஷ்ணா! கிருஷ்ணா!'என அழைத்தான். கிருஷ்ணனும் அர்ஜுனன் முன் தோன்றி தன்னிடமிருந்த கத்தியை அவனிடம் கொடுத்து,""இந்த கத்தியை வைத்து நீ எந்த இடத்தில் தோண்டினாலும் தண்ணீர் வரும்,'என்று கூறி மறைந்தார். அர்ஜுனனும் அந்த கத்தியால் தரையில் கீறி கங்கையை வரவழைத்து தன் தாகத்தை தணித்து கொண்டான். இந்நிகழ்ச்சி நடந்த இடம் பார்த்தன்பள்ளி என புராணம் கூறுகிறது.

இருப்பிடம் :நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ளது பார்த்தன்பள்ளி. இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்து பஸ் வசதி உள்ளது.